Thursday 24 April 2014

நீ வேண்டாம் எனக்கு!!

கோடையில் இதம் தரும் 
குளிர் தென்றலாக 
நீ வேண்டாமெனக்கு!

வாடையில் சூடேற்ற 
என் போர்வைக்குள்ளும் 
நீ புக வேண்டாம்!!

மழையின் கூதலில் 
ஒதுங்கியே அனுபவிக்கும் 
கணப்பாகவும் நீ வேண்டாம்!!

வாழ்வின் வசந்த வாசல்களை
நான் திறந்தே சுகித்திருக்க
நீ என் தனிமையாயிரு,
அது போதும்!!

தோல்வியில் நான் 
துவளும் போது  எனை 
தேற்றி எழுப்பும் 
சக்தியாயிரு, அது போதும்!!

வலிகளில் நான் துடிக்கும் போது
எனக்கு மருந்திடும் 
மயிலிறகின் நுனியாயிரு,
அது போதும்!!

சாதனைகள் நான் படைக்கும் போது
சபையோரின் பாராட்டுதலில் 
என் பார்வைக்கொரு 
பெருமிதமாயிரு,  அது போதும்!!

காலதேவன் என் கதை முடிக்கவரும்போது
மூடப்போகும்  என் விழிகளின்
முன்னால் இரு அது போதும்,
அது மட்டும் போதும்!!!

Saturday 5 April 2014

தேர்தல் திருவிழா போஸ்டர்!



நோட்டை பார்த்து ஓட்டு போடாதே!!
நோக்கம் பார்த்து ஒட்டு போடு!!

Saturday 22 March 2014

தேர்தல் திருவிழா போஸ்டர்

டாஸ்மாக்கை மூடினால் . பாஸ்மார்க் உனக்கு!! 

தேர்தல் திருவிழா போஸ்டர்








"இலவசத்தை பார்த்து ஓட்டு போடாதே!
இருப்பதையும் இழந்து விடாதே!!
தேர்தல் திருவிழா போஸ்டர் 


"ஊருக்கு உழைப்பவருக்கு போடுவோம் வோட்டு!
ஊழல் பெருச்சாளிகளுக்கு வைப்போம் வேட்டு!!"

சுத்தமும், சுகாதாரமும்
    

கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது முதுமொழி. தற்போது குப்பையில்லா ஊரில் குடியிருக்க வேண்டும் என்று யாராவது சொன்னால் நாம் அனைவருமே தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்!  அந்த அளவிற்கு கிராமம் தோறும், நகரந்தோறும், மாநகரங்களா அல்லது மாநரகங்களா என்று முகம் சுளிக்குமளவிற்கு மலை போல் குப்பைகள்!!
      நாள்தோறும் மலை, மலையாய், டன் கணக்கில் குவியும் குப்பைகளில் பிளாஸ்டிக் கழிவுகளே மிக அதிகம்.  அரசு அனுமதித்த அளவு மைக்ரேன் பிளாஸ்டிக் மட்கவே பல ஆண்டுகளாகும்.  மற்ற மைக்ரேன் அளவுகள் பற்றி யாரும் சிந்திக்க தயாராகவில்லை.
      நாம் மனிதர்களுக்கு நடுவில் என்றுமே வாழ்வதில்லை.  ஆனால் குப்பைமேட்டினில் குடியிருக்க தயங்குவதில்லை!  இலவசங்களில் மூழ்கி, அவற்றை மென்மேலும் பெறுவதற்கான வழிமுறைகளை யோசிக்கும் நாம் சுத்தம், சுற்றுசூழல் பற்றி கவலைப்பட மட்டுமன்றி அதை நினைப்பது கூட இல்லை.
      திடக்கழிவு மேலாண்மை பற்றிய அறிவார்ந்த விழிப்புணர்வு அரசிடமும் இல்லை, நம்மிடமும் இல்லை!!  இதற்கான செயல் திட்டம் பற்றி அரசு சிந்திக்கவும் இல்லை!  வாக்குகள் பெறுவதற்காக கோடிகணக்கில் செலவு செய்யும் அரசுகள், சுகாதார மேம்பாடிற்கு செய்வதுதான் என்ன?  செய்தது தான் என்ன?
      தமிழகத்தினூடே பல ஊர்களுக்கும் செல்ல நேரும்போது அல்லது நாம் வாழும் பகுதிகளில் கூட அதிகபட்ச சுகாதார சீர்கேட்டை காண முடிகிறது.  அதிலேயே உழலும் நாம் முக்கிய குற்றவாளிகள் ஆகிறோம்!  நாம் தேர்ந்தெடுத்த உள்ளாட்சி பிரதிநிதிகள், குறுவட்ட, பெருவட்டங்கள் என்ன தான் செய்கிறார்கள்? 
     
அவர்கள் சிந்தனை எல்லாம் போட்ட முதலை குண்டும், குழியுமான சாலைகளின் ஒப்பந்தங்களிலும், இடிந்து விழும் பாலங்களின் கட்டுமானத்திலும் எடுத்து கொண்டிருக்கவே நேரமின்றி இருக்கும் போது, சுகாதரமாவது, மண்ணாவது?
இதில் மாற வேண்டியது அரசாங்கம் மட்டுமல்ல, எதற்கெடுத்தாலும் அரசை குறை சொல்லும், எல்லாவற்றிற்கும் அரசை மட்டுமே எதிர்பார்க்கும் மக்களின் மனப்பான்மைதான்!  ஊரை சுத்தமாக்க நாம் செய்ய வேண்டியது தான் என்ன?  கீழ்கண்ட நடவடிக்கைகள் மூலம் ஊரை சுத்தமாக்க இயலும்.
# முதலில் அரசுக்கு திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு வரவேண்டும்.  மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
# இலவசங்களுக்காக கோடிகணக்கில் செலவழிக்கும் அரசு,  மேலைநாடுகளில் செய்யப்படும் மேலாண்மை நடவடிக்கைகளை அறிந்து, அதுபோன்ற இயந்திரங்களை தருவித்து, இங்குள்ள அனைத்து மாநகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு கொடுக்க வேண்டும்.
# பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி மற்றும் மறு பயன்பாடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்.
# இயந்திரங்கள் கொண்டு பிளாஸ்டிக்கை தூளாக்கி சாலைகள் போட பயன்படுத்த வேண்டும்.
# சுற்றுசூழலை சுத்தமாக வைத்துள்ள மாநகராட்சி, ஊராட்சி, பேரூராட்சிகளுக்கு பரிசளிப்பதோடு மட்டுமன்றி அந்த ஊர்களுக்கு அரசின் நலத்திட்டங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
# சுகாதாரத்தை பேணி காக்காத நகர் மன்ற உறுப்பினர்கள், மாநகர மேயர்கள், பேரூராட்சி தலைவர்களுக்கு மறுபடி தேர்தல் வரும்போது வாய்ப்பு தரக்கூடாது.
# அரசு சாரா அமைப்புகளான அரிமா, ரோட்டரி போன்ற சங்கங்களோடு சிறிய அளவில் உள்ளூரிலேயே நிறைவேற்றக்கூடிய சுகாதாரத் திட்டங்களை குறுகிய கால கட்டாய ஒப்பந்தங்கள் போட்டு நிறைவேற்ற வேண்டும்.
# இதிலும் பாதாள சாக்கடை திட்டம், கழிவறை பயன்பாடு மற்றும் பொது இடங்களை சுத்தமாக வைத்திருப்பது போன்ற செயல் திட்டங்களை மேற்கூறிய சங்கங்களோடு உறுதியாக நிறைவேற்ற வேண்டும்.
# மேற்கூறிய சங்கங்களின் ஆண்டு செயல்திட்டத்தில் இவைகளை கட்டாயமாக்க வேண்டும்.
# பொது இடங்களில் மாநகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சிகள் பொது கழிப்பறைகள் கட்டி, குறைந்த அளவில் கட்டணங்கள் வசூலித்தால்,  உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நிதி வசதி ஏற்படும்.
# இறுதியாக இந்த சுத்தப்படுத்தும் பணியில் சினிமா ரசிகர் மன்றங்களை ஈடுபடுத்தலாம். 
மொத்தத்தில் சுத்தம் பற்றிய விழிப்புணர்வு அனைத்து மக்களுக்கும் போய் சேர வேண்டும்.   வீடு சுத்தமானால் நாடு சுத்தமாகும்!  நாடு சுத்தமானால் நம் மதிப்பும், வாழ்க்கைத்தரமும் உயரும்!!  இந்தியா கண்டிப்பாக சுத்தமாவது நம் கையில் தான் இருக்கிறது.  எனவே சுத்தம் காப்போம்!  சுகமடைவோம்!!


   

Sunday 16 February 2014

இருவர் இணைந்ததால்,
உண்டான மென்மையே
உனக்கு ஈடு இணையில்லை
இது உண்மையே!
நீ வன்மையானால்
உண்டாகும் காயமே!!
உன் மென்மைதான் என்றும் மாயமே!!
ஆவி பறக்க உன்னை மெய்யால் 
தழுவாமல், நெய்யால் தழுவிஉண்டால் 
நாவில் ருசி கூடுமே!
வயிற்றின் பசி ஓடுமே!!
உன் மென்மையை எதற்கு ஈடென்பேன்?
என் வெள்ளை தேவதையே!!
உள்ளம் கவர் இட்லியே!
சரியான துணை சேர்ந்தால்
உன் சுவை பெருகுமே!  அதுபோல் 
இதமான துணை நமக்கு கிடைத்தால்
வாழ்வே சுவைக்குமே 
என் உள்ளம்கவர் இட்லியே !!
வாழ்க நீயே!!